நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க 2024 செப்டம்பர் 5ஆம் தேதி படமானது உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்திருந்தார். எனவே தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சமீப காலமாக தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே கடந்த 2014இல் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து இவர்கள் தளபதி 69 படத்திற்காக இணைய உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் இதனை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.