தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி ரியோ ராஜ் தற்போது ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியுள்ளார். ஜோ திரைப்படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் ஜோ படத்தை விநியோகம் செய்தது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரியோ ராஜின் ஜோ படமானது கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகி வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்த ஜோ படம் எதிர்பாராத அளவில் வெற்றியை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே பெயர் பெற்றுள்ளது. உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்டு தரமான ஒரு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம். முதல் பாதியில் காமெடி கலந்த காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. அந்த வகையில் சாதாரண காதல் படத்தை போலவே நாயகன், நாயகி, கல்லூரி வாழ்க்கை என தொடங்கி மெல்ல மெல்ல ஒரு அழகான படமாக மாறுகிறது. எமோஷனலான இன்டர்வெல் பிளாக் மற்றும் எதிர்பாராத கிளைமேக்ஸ் ஆகியவை ரசிக்கும் ரகமாக அமைந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் விநியோகஸ்தர்களுடன் இணைந்து ஜோ பட வெற்றியை படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரின் பாராட்டு மழை படத்தின் வெற்றிக்கு ஒரு பக்கபலமாக அமைந்துள்ளது.