நடிகர் ஜூனியர் என்டிஆர், ஹாய் நான்னா பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
ஜூனியர் என்டிஆர், பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் எனும் திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து இவர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தேவரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது 2024 செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதேசமயம் வார் 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். மேலும் இவர் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஜூனியர் என்டிஆர் – இன் 31 வது படமாக உருவாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், சௌர்யவ்
இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம். இயக்குனர் சௌர்யவ், கடந்த ஆண்டு வெளியான ஹாய் நான்னா எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நானி, மிர்ணாள் தாகூர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படம் நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து சௌர்யவ், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இந்த படமானது இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இதன் முதல் பாகம் 2028 ஆம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 2031 ஆம் ஆண்டிலும் ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.