கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்திருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் நல்லாண்டி எனும் முதியவர் அறிமுகமாகி இருந்தார். விஜய் சேதுபதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தாலும் நான்காண்டுகளுக்குப் பிறகு தான் இந்த படம் வெளியானது. அதற்குள் நல்லாண்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் நடிப்பில் முன்பின் அனுபவம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே ஒன்றி இருந்தார்.
ஆனாலும் கடைசி விவசாயி படத்தின் அவரின் கதாபாத்திரம் தற்போது வரை மறையாமல் பேசப்படுகிறது. நல்லாண்டியையும் அவரின் கடின உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக நல்லாண்டிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அத்தையாக நடித்திருந்தவர் காசம்மாள். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். பால்சாமி என்பவரின் மனைவியான இவருக்கு, நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பெரிய மகன் நாமகோடி என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக தாய் காசம்மாளுடன் வசித்து வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு, அம்மாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே மது அருந்த பணம் தர மறுத்ததால், மூத்த மகன் நாமகோடி, தாய் காசம்மாளை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.