தமிழ்நாட்டில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று இருந்தது. தற்போது வரையிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் திரையுலக முன்னோடிகளாக இருந்து தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி. இவர் இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவராக இருந்தவர். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகுக்கு பெரும் பங்காற்றி “கலைஞர்” என்னும் பட்டத்தை தன் வசமாக்கி கொண்டவர். 20 வயதிலேயே திரைக்கதை எழுதும் பணியை தொடங்கிய கருணாநிதி, தன்னுடைய முதல் படமான “ராஜகுமாரி” மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து சுமார் 60 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அனார்கலி, சாக்ரடீஸ், காகிதப்பூ, தூக்கு மேடை, மந்திரகுமாரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடகங்களையும் படைத்துள்ளார். இன்று வரை சிறந்த வசனம் மற்றும் கதைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பராசக்தி, மனோகரா போன்ற காலத்தால் அழியாத காவியங்களும் இவருடைய பேனாவிலிருந்து பிறந்தவையே. கலை உலகிற்கு இவர் அளித்த ஒப்பற்ற பங்களிப்பால் 2009ம் ஆண்டில் நடைபெற்ற பெப்சி மாநாட்டில் “உலகக் கலை படைப்பாளி” விருதையும் பெற்றார் கருணாநிதி. கலை மட்டுமல்ல ஒரு நல்ல கலைஞனும் காலத்தால் அழிக்க முடியாதவன் தான் என்பதை நிரூபித்தவர். அத்தகைய மகா கலைஞர் ‘கருணாநிதி’ 1924 இல் ஜூன் 3 அன்று பிறந்தார். நாள்தோறும் விடியல்கள் தான் புதிது, சூரியன் என்றும் ஒன்றுதான். அந்த வகையில் அவருடைய 101வது பிறந்த நாளினை தமிழ்நாட்டுக்கும், தமிழ் திரையுலகுக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, கலைத்தாயோடு இணைந்து நாமும் போற்றுவோம்.