கமல் சாருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக காளிதாஸ் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
நடிகர் காளிதாஸ் ஜெயராமும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் படத்தில் காளிதாஸ், கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் கமல் உடன் நடித்த அனுபவம் குறித்து காளிதாஸ் ஜெயராம் மனம் திறந்துள்ளார்.
“கமல் சாருடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி. அவருடன் நடிக்கும்போது நம்முடையை வீட்டிற்கு திரும்பி செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல சிறுவயதிலிருந்தே ஷங்கர் சாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இந்த இருவருடனும் ஒரே செட்டில் இணைந்து பணியாற்றிய அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒரு ரசிகனாகவே நான் மாறிய தருணமாக இருந்தது ” என்று கூறியுள்ளார்.