கமல், சிம்பு கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கிடையில் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அடுத்தது இந்த படத்தில் சிம்பு, திரிஷா,அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கௌதம் கார்த்திக், நாசர்,அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருவதும் படத்தின் எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். அடுத்தது, கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டது. டெல்லி, ராஜஸ்தான், புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமை கிட்டத்தட்ட 149.7 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது இதுவரை எந்த படமும் விற்பனையாகாத விலையில் விற்பனையாகி ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது இந்த தக் லைஃப் திரைப்படம். மேலும் தக் லைஃப் படத்தினை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.