நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் படம் குறித்து பேசி உள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசனின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக்செல்வன், கௌதம் ராம் கார்த்திக், ஐஷ்வர்யா லக்ஷ்மி, நாசர், அபிராமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மேலும் இன்று (ஏப்ரல் 18) இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதில் பேசிய கமல்ஹாசன், “நாங்கள் பல கதைகளைப் பற்றி விவாதித்தோம். மணிரத்னம், நான் வைத்திருந்த பல ஸ்கிரிப்ட்களில் ஒன்றை தனக்கு பிடித்ததாக சொன்னார். நானும் அதை எடுக்க சொன்னேன். அவர் அந்த ஸ்கிரிப்டில் இன்ஸ்பயர் ஆன நிலையில் அதை தன்னுடைய ஸ்டைலில் எழுதினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகமாக்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்தால் சொல்லவே வேண்டாம் அதில் நிச்சயம் மேஜிக் இருக்கும். அதனால் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.