மலையாள சினிமாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவல் இயக்கியிருந்தார். சுசின் சியாம் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சைஜு காலித் ஒளிப்பதிவு செய்திருந்தார். பரவா பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. மலையாளத்தில் மட்டுமே வெளியான இந்த படம் கேரளாவை தாண்டியும் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு கிடைத்த பேராதரவினால் மதுரை, திருவாரூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி 50 கோடியை தாண்டி வசூல் செய்து பட்டைய கிளப்பி வருகிறது. மேலும் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களிலும் இப்படம் அதிக வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மஞ்சுமெல் படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.