கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இயக்குனர் சங்கர் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 233 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பும் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதேசமயம் கமல்ஹாசன், பிரபல சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன்படி கமல்ஹாசனின் 237வது (KH237) படமாக உருவாகும் இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் ஏற்கனவே ஏஐ படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர் கமல்ஹாசன், பாதியில் நிறுத்தப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.