கனா பட நடிகர் தர்ஷன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தர்ஷன் கடந்த 2015ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். பின்னர் தும்பா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கிய தர்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் துணிவு, அயலான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில் தர்ஷன், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் தர்ஷன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தர்ஷன், அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் தர்ஷன் உடன் இணைந்து அர்ஷா பைஜூ, காளி வெங்கட், தீனா, வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் கலகலப்பான பேண்டஸி கதைக்களத்தில் தயாராக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.