இயக்குனர் யஸ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.டிரைலரில் காண்பிக்கப்பட்டது போல படத்தில் நான்கு நாயகிகள். நான்கு பேருக்கும் வெவ்வேறு பரிமாணங்களில் ஏற்படும் பிரச்சனைகள், அதை அவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பற்றிப் பேசியிருக்கிறது கண்ணகி. பல இளைஞர்கள் பெண் பார்த்துச் செல்லும், ஆனால் திருமணம் கைகூடாத கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி.
திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வேண்டாம் என போராடிக் கொண்டிருக்கும் பெண்ணாக வித்யா பிரதீப். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் பெண்ணாக ஷாலின் சோயா. காதல் விவகாரத்தால் உருவான நான்கு மாத கர்ப்பத்தை கலைக்கத் துடிக்கும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன். சமூகத்தில் நிகழ்காலத்தில் பல பெண்கள் வாழ்க்கையில் நடைபெறும் பிரச்சனைகள் தான் படத்தின் முக்கிய ஆணிவேராக கையாளப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரச்சனைகள் ஒரு திரைப்படமாக சொல்லப்படும் போது பார்வையாளர்களை ஒன்றச் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் கண்ணகி படத்தில் அது சில இடங்களில் மிஸ் ஆனது போல தோன்றாமல் இல்லை. படத்தில் வக்கீலாக வரும் வெற்றி, படத்தின் இயக்குனர் யஸ்வந்த் கிஷோர், ஷாலின் சோயா ஆகியோரின் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஓரளவு நியாயம் சேர்த்துள்ளனர். முதல் பாதியில் படத்திலிருந்து நார்மலான வேகம் கூட இரண்டாம் பாகத்தில் சுத்தமாக இல்லை. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் படத்தின் பின்னணி இசை ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் பாடல்கள் சோதித்து விட்டன. ஒளிப்பதிவு இன்னும் நன்றாக இருந்திருக்கலாமே என்று தோன்ற வைத்தது. சில வசனங்கள் சிந்திக்க வைக்கும் படியாக இருந்தது. படத்தில் இப்படி சில குறைகள் இருந்தாலும் இப்படம் கூற வந்த விஷயத்தை வெறும் கதை தானே என்று யாராலும் கடந்து போக முடியாது. சில நிமிடங்களாவது இப்படம் ஒரு சில சிந்தனைகளை நம் எண்ணத்தில் ஓட விடும். இன்னும் கூட பெண்கள் முழு சுதந்திரத்தை எட்டி விடாத இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய அவசியமான கதை தான் இது. ஆனால் சொல்லப்பட்ட விதம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
- Advertisement -