நடிகர் கவின், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடிக்க வருகிறார். அந்த வகையில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ப்யார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இதில் நடிகர் கவினுக்கு அப்பாவாக லால் நடிக்க, அம்மாவாக கீதா கைலாசம் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், ஆதிதி பொஹங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு இந்த படம் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது மேலும் இது கோடை விடுமுறை என்பதாலும் இந்த படம் இனிவரும் நாட்களிலும் அதிக வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கவின் தனது ஆசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். குறிப்பாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த கிளைமாக்ஸ் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- Advertisement -