தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பெங்குயின், நடிகையர் திலகம், சாணிக்காயிதம், குட் லக் சகி போன்ற பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பில் அடுத்ததாக “ரகு தாத்தா” திரைப்படம் வெளியாக உள்ளது. ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான பேமிலி மேன் வெப் சீரிஸ்-க்கு கதை எழுதிய சுமன் குமார் தான் இப்படத்துக்கும் கதை எழுதி இயக்கியுள்ளார். சமூகத்தில் தனக்கான உரிமைக்காக போராடும் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காமெடி கலந்த திரைக்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஃபேமிலி மேன், பல சினிமா ரசிகர்களுக்கு பேவரைட்டான வெப் சீரிஸ் ஆகும். எனவே சுமன் குமார் இயக்கியுள்ள ரகு தாத்தா படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே ஜி எஃப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டீசரிலேயே படத்தின் ரிலீஸ் தேதியும், எந்தெந்த மொழிகளில் படம் வெளியாக உள்ளது எனவும் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.