நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ், திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் பென்குயின், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ரகு தாத்தா, சைரன், ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றொரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கண்ணிவெடி’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர்கள் ராம் மற்றும் ஹரி ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து வி ஜே ரக்சன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நேற்று தொடங்கப்பட்டது. திரில்லர் கதைகளத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஊடகவியல் மாணவியாக நடிக்க இருக்கிறார். மேலும் இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 22 இல் தொடங்கும் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.