ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சைரன். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சைரன் 108 என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் , அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கள் என அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சைரன் படம் குறித்த சில தகவல்களை படத்தின் இயக்குனரான அந்தோணி பாக்யராஜ் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ஜெயம் ரவியின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தால் அவர் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து பரோலில் வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் இளமையான தோற்றத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். அதேசமயம் ஜெயம் ரவிக்கு வில்லியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். படத்தில் மெயின் வில்லன் இருந்தாலும் இவர்களின் வில்லத்தனம் பெரிய அளவில் பேசப்படும். இப்படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் எமோஷன்ஸ் அதிகமாக இருக்கும். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் கட்சிதமாக பொருந்திபோயிருக்கிறார், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்” என்று படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.