அண்மையில் வெளியாகும் மலையாள திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே ஓடிடி தளங்களில் மலையாள படங்களை வௌியிடுவதில், பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்த 42 நாட்கள் கழித்து தான், ஓடிடி தளத்தில் வர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனைக்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இந்த நிபந்தனை மீறி சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.
இதனால், நிபந்தனையை மீறி செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் மீது சர்ச்சைகள் எழுந்தன. அண்மையில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி ஓடிடி தளத்திலும் வௌியானது. இத்திரைப்படமும் நிபந்தனையை மீறி முன்கூட்டியே ஓடிடியில் வெளியிடப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 22-ம் தேதி முதல் புதிய மலையாளப் படங்கள் திரையிடப்படாது என போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால், போராட்டம் தொடங்கப்பட்ட அதே நாளில் வெளியான மஞ்சுமோல் பாய்ஸ் திரைப்படம், மற்றும் பிரேமலு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகின்றன. படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரள மட்டுமன்றி தமிழகத்திலும் இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதை கவனித்த திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.