இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் காளி என்ற படத்தையும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கியிருந்தார். மேலும் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியான காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் கிருத்திகா உதயநிதி. இந்த படத்தில் ரவி மோகன், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் சேதுபதியிடம் கதை ஒன்றை சொல்லி இருப்பதாகவும் அந்தக் கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து போக, அவர் அந்த கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வருங்காலத்தில் விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான மற்ற அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.