கருப்பு- வெள்ளை காலம் முதல் இன்று வரை சினிமா பல்வேறு வடிவங்களில் பரிமாணம் அடைந்துள்ளது. ஒரு கலை பரிமாணம் அடையும் போது அதை உருவாக்கும் கலைஞர்களும் அதை ரசிக்கும் ரசிகர்களும் பரிமாணம் அடைவது புறக்கணிக்க முடியாதது. ஒரு காலத்தில் பாடல்களுக்காக மட்டுமே படம் ஓடிய நிலையெல்லாம் கூட இருந்தது. ஆனால் இன்றோ பாடல்களே இல்லாமல் வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கூட மாபெரும் வெற்றி படங்களாக மாறுகின்றன. காலத்திற்கு ஏற்ப ரசிகனின் ரசனை மாறுவதே இதற்கு காரணம். வழக்கமான கதையம்சங்களை கையாளும் அனுபவம் மிக்க இயக்குனர்கள் கூட யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில படங்களில் தோல்வி அடைகின்றனர். அதை ஈடு செய்யும் வகையில் அந்தந்த காலத்தில் நல்ல படைப்புத்திறன் கொண்ட புதுமுக இயக்குனர்களும் உதித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டும் பல புதிய இயக்குனர்கள் தங்கள் முதல் படத்திலேயே புறக்கணிக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ளனர். அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.அயோத்தி – மந்திரமூர்த்தி
மந்திரமூர்த்தி என்ற அறிமுக இயக்குனர் அயோத்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சசிகுமார் , ப்ரீத்தி அஸ்ராணி, குக் வித் கோமாளி புகழ் ,யஷ்பால் ஷர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். மாதேஷ் மாணிக்கம் இதற்கு ஒளிப்பதிவு செய்ய என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வட மாநில மக்கள் தமிழகத்திற்கு வரும்போது எதிர்பாராத விதமாக ஏற்படும் சம்பவங்களை அவர்கள் சமாளித்து எப்படி தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி. வழக்கம்போல் சசிகுமார் தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் இந்த 2023 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
போர் தொழில் – விக்னேஷ் ராஜா
தொடக்கத்தில் சிறு சிறு குறும்படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா. தன் முதல் படமே தரமான கிரைம் திரில்லரை கொடுத்திருக்கிறார். கதைக்கு ஏற்றார் போல் சரத்குமார், அசோக் செல்வன், சரத் பாபு மற்றும் பலர் சிறப்பாக நடித்திருந்தனர். பெரும்பாலான படங்களில் கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி, மொபைல் ட்ராக்கிங் போன்றவற்றை பயன்படுத்தி கொலையாளியை கண்டுபிடிப்பார்கள். ஆனால் போர் தொழில் திரைப்படத்தில் அதையெல்லாம் பயன்படுத்தாமல் காவல்துறையினரின் அறிவை மட்டுமே பயன்படுத்தி கொலையாளியை கண்டறிந்து அசத்தியிருப்பர். இவ்வாறு முதல் படத்திலேயே பேரையும் புகழையும் பெற்றவர் தான் விக்னேஷ் ராஜா. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் போர் தொழில். எனவே இந்த படமும் 2023 ஆம் ஆண்டில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டாடா – கணேஷ் கே பாபு
தொடக்கத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய கவினுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது டாடா படம் தான். இந்த படத்தை கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். இதில் கவின் உடன் இணைந்த அபர்ணாதாஸ் , பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தந்தை – மகன் இருவருக்கும் இடையில் அன்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தன் அறிமுகப்படுத்திய தன் பெயரை நிலை நாட்டியவர் தான் கணேஷ் கே பாபு.
குட் நைட் – விநாயக் சந்திரசேகரன்
மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் நைட். ஒரு மனிதனுக்கு உண்டாகும் குறட்டை பிரச்சனையால், அவனின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து ஏ படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறட்டை என்கிற வித்தியாசமான மையக்கருவை தேர்ந்தெடுத்து அதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் தான் விநாயக் சந்திரசேகரன். மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விநாயக் சந்திரசேகரனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.