நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் இவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியாகி இருந்த கொட்டுக்காளி திரைப்படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்றது. அதேபோல் தற்போது வெளியான பிறகும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது இந்த கொட்டுக்காளி. ஆணாதிக்கத்தில் சிக்கி ஒரு பெண் எப்படி தவிக்கிறாள் என்பதை கால் கட்டப்பட்ட சேவல் கட்டை அவிழ்த்து மீள்வதற்கு எப்படி போராடுகிறது என்பதை தொடர்புபடுத்தி திரை கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இனிவரும் நாட்களிலும் இந்த படம் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -