KPY பாலா ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
KPY பாலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர். அதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அடுத்தது சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார் KPY பாலா. அதேசமயம் இவர் திரைத்துறையில் தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் பணத்தில் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். சமீபத்தில் கூட காது கேட்காத 100 குழந்தைகளுக்கு 200 செவித்திறன் கருவிகள் வாங்கிக் கொடுத்து உதவி இருந்தார். இவ்வாறு உதவி செய்வதன் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள KPY பாலா, தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட மூன்று படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளாராம் KPY பாலா. அதில் ஒன்று வைபவ் நடிப்பில் வெளியான ரணம் படத்தின் இயக்குனர் ஷெரிஃப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவர் நடிக்கும் புதிய படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.