இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், அஜித் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வில்லன், வரலாறு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். எனவே கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “அஜித் மிகச் சிறந்த மனிதர். அவர் மனதில் பட்டதை நேரடியாக பேசுபவர். அதேசமயம் மிகவும் கண்டிப்பு மிக்க மனிதரும் கனிவு மிக்க மனிதரும் ஆவார். படப்பிடிப்பில் யாருக்காவது ஏதேனும் நடந்தால் அவர்களை முதல் ஆளாக கவனித்துக் கொள்வார் அஜித். அவர் எது சரி என்று நினைக்கிறாரோ அதை வெளிப்படையாக செய்யக்கூடியவர். யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். வரலாறு படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளை ஏழு நாட்களில் தனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தந்தார். மேலும் நடிகர் அஜித், கார், பைக் என்றால் பைத்தியமாக இருப்பார். அதேசமயம் வில்லன் படத்தின் படப்பிடிப்பின் போது வானத்தின் மேல் சத்தம் கேட்டால் அது என்ன மாடல் பிளைட் Flight என்று சொல்வார். ரேஸிங்கில் அஜித் கார் ஓட்டுவதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும். ஆனால் அவருடைய மனைவி ஷாலினி பயப்படவே மாட்டார்” என்று அஜித் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.