குடும்பஸ்தன் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் இயக்கியிருந்த குடும்பஸ்தன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அதாவது மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், குடும்பஸ்தனாக தன்னுடைய வாழ்வில் நடக்கும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் கொடுத்திருந்தார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி. இந்த படம் வெளியான நாள் முதலை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் ராஜேஸ்வரி காளிசாமி, “குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பாக நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் தொடங்கிய போது எங்களுக்கு சினிமாவுக்கு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. அப்போதுதான் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒரு படம் என்றால் ரசிகர்கள் நகைச்சுவை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப குடும்பஸ்தன் படத்தை நகைச்சுவையாக படமாக்கினோம். படத்தை பார்த்த பல்வேறு நடிகர்கள் இயக்குனர்கள் பாராட்டி வருகின்றனர். எங்களின் அடுத்த படத்திற்கான கன்டென்ட் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.