விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( கோட்). வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த்தா நுனி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். மேலும் இவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இதற்கிடையில் விஜய் குரலில் விசில் போடு எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் முன்னோட்ட வீடியோவும் இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்த இரண்டாவது பாடலானது விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணியின் ஏஐ குரலில் பாடப்பட்டிருந்தது. மெலோடி பாடலாக வெளியான இந்த பாடலும் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக அமைந்தது.
இந்நிலையில் இயக்குனரும் இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் கோட் படத்தில் குத்து பாடல் ஒன்றை எழுதி இருப்பதாகவும் அந்தப் பாடல் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த பாடல் விஜய், திரிஷா ஆகியோர் நடனமாடிய பாடல் ஆக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -