கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, கார்த்திகேயா தேவ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிம்ரன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருக்கிறது.
எனவே ரசிகர்கள் இப்படத்தை வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும் உலக அளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது என்றும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த தகவல் உண்மையானால் அஜித்தின் திரைப்பயணத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் தான் குறுகிய நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -