ஜெயிலர் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்திலும் அனிருத்தின் இசையிலும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து நெல்சன், ரஜினி, அனிருத் ஆகியவரின் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்து இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் சென்னையில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இந்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் அட்டப்பாடியில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் 2 படப்பிடிப்பை அட்டப்பாடியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.