வெற்றிமாறன் தென்னிந்திய திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் விஜய் சேதுபதி மற்றும் சூரி கூட்டணியில் வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில் வெற்றி மாறன், கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்‘ என்னும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.நடிகர் அமீர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படம் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாக உள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பாக சூர்யா காளைகளை அடக்கும் பயிற்சியும், அதற்கான சோதனை படப்பிடிப்பும் நடைபெற்றது.
ஆனால் அதைத் தொடர்ந்து இந்த படம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் வாடிவாசல் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெற்றிமாறன், “வாடிவாசல் படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அதற்காக லண்டனில் கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போல ஒரு ரோபோ காளையும் உருவாகி வருகிறது” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் வட சென்னை 2 படம் விரைவில் வரும் என்றும் விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.