மம்மூட்டி நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மயுகம் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மோலிவுட் திரையுலகில் முடிசூட மன்னனாக வலம் வரும் நடிகர் மம்மூட்டி. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராகுல் சதாசிவம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள திரைப்படம் பிரம்மயுகம். கடந்த 2022-ம் ஆண்டு பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குநர் ராகுல். இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்த ராகுல், அடுத்ததாக மம்மூட்டியை வைத்து பிரம்மயுகம் படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மம்மூட்டி இப்படத்தில் நடித்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்திற்கு முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது. நாளை திரையரங்குகள் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில கதாபாத்திரங்கள், தங்களின் முன்னோர்களை குறிப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைக்குழுவின் சான்றிதழை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.