லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது ‘லியோ’. தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானது.
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லை பகுதி மற்றும் கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழக எல்லையில் 2 திரையரங்குகள், கேரளாவில் 655 திரையரங்குகளில் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாவட்டங்களில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 05.00 மணி காட்சி வெளியானது.
ரசிகர்கள் மட்டுமன்றி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் படத்தை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்றனர். இந்நிலையில், லியோ திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வெளியான முதல் நாளிலேயே டெலிகிராம் உள்ளிட்ட இணைய பக்கங்களில் லியோ படத்தை வெளியிட்டு உள்ளனர்.