யூடியூப் ட்ரெண்டிங்கில் லியோ ட்ரெய்லர் முதலிடம்
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையிலின்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி உள்ள திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். அதனால் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் லியோ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.
இந்நிலையில் வெளியான 10 மணிநேரத்தில் 3.5 கோடி பார்வைகளை கடந்த லியோ படத்தின் ட்ரெய்லர் யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் லியோ பிரியர் ஷோ கிடையாது, காலை சிறப்புக் காட்சி அரசு அனுமதித்தால் தான் திரையிடப்படும், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் லியோ தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.