பிரபல இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து இயக்கிய “போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கி ஹிட் பட இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து “தானா சேந்த கூட்டம்” படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி அமைத்துள்ளார். கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக “லவ் டுடே” படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இதனால் இளைஞர்களின் மனதில் ஸ்ட்ராங்காக அமர்ந்தார் பிரதீப் ரங்கநாதன். எனவே விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இப்படத்தில் கிர்த்தி செட்டி , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு எல்.ஐ.சி(LOVE INSURANCE CORPORATION) எனப் பெயரிடப்பட்டு சமீபத்தில் பூஜையும் போடப்பட்டது.இந்நிலையில் படத்தின் தலைப்பு தான் தற்போது சிக்கலாக மாறி உள்ளது. பிரபல மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, தங்களுடைய பெயரை அவமதிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இதனால் படத்தின் டைட்டிலை மாற்றிக் கொள்ளும்படி விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஏழு நாட்களுக்குள் தலைப்பை மாற்றவில்லை எனில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எல்ஐசி நிறுவனம் எச்சரித்துள்ளது. படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுதான் இந்த டைட்டிலை விக்னேஷ் சிவன் செலக்ட் செய்து இருந்தார். தற்போது எழுந்துள்ள இந்த சிக்கலால் படத்திற்கு பொருத்தமான வேறு டைட்டிலை தேடுவார்களா அல்லது அடுத்த கட்ட நகர்வாக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இந்த எல்ஐசி பட டைட்டில் என்னுடையது என இயக்குனர் எஸ் எஸ் குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.