தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் பல புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கி வரும் ஃபைட் கிளப் திரைப்படத்தை தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கிருபாகரன் எடிட்டிங் பணிகளை செய்ய லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் நடிக்கிறார். இவர் கடந்த 2016 மற்றும் 2019 இல் வெளியான உறியடி 1,2 படங்களின் மூலம் பிரபலமானவர். அரசியல் சம்பந்தமான கதையம்சம் கொண்ட இந்த படங்கள் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தை விஜயகுமாரே எழுதி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் எழுத்தாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர்.
தற்போது இவர் ஃபைட் கிளப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.