மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். வழக்கமான கமர்ஷியல் படங்களாக இல்லாமல், மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், காலா திரைப்படத்தில் மணிகண்டனின் முகமும், பெயரும் மக்கள் இடத்தில் பிரபலம அடையத் தொடங்கியது. இதையடுத்து, சில்ல கருப்பட்டி படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். தொடர்ந்து பாவ கதைகள், நெற்றிக்கண் படத்தில் நடித்தார்.
ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த ஜெய்பீம் திரைப்படம் தான் அவரது புகழை உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. இத்திரைப்படம் மணிகண்டனுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. அடுத்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் படம் வரவேற்பை பெற்றது. தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், லவ்வர் படத்திலிருந்து புதிய பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.