எம்புரான் படம் குறித்து பிரித்விராஜ் பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மோகன்லால், பிரித்விராஜ் கூட்டணியில் எம்புரான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை லைக்கா, ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் மோகன் லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் டீசரும் ட்ரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய பிரத்விராஜ், “எம்புரான் படத்தின் வெற்றியைப் பொறுத்து லூசிபர் மூன்றாம் பாகம் எடுக்கப்படும்” ” என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து மற்றுமொரு பேட்டியில் பேசிய இவர், “லூசிபர் திரைப்படம் 2 மணி 57 நிமிடங்கள் ஓடக்கூடிய படம். மோகன்லால் சார் இந்த படத்தில் 41 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார். அது போல தான் இந்த மூன்று படங்களுமே இருக்கும். மோகன்லால் சாரின் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வது கஷ்டம். ஏனென்றால் முழு நேரமும் அவரைக் காட்டினால் நீங்கள் ஈர்ப்பை இழந்து விடுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.