தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இது போன்ற படங்களை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது ரசிகர்களின் விமர்சனங்கள் தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் முதல் காட்சியை பார்த்துவிட்டு தங்களின் விமர்சனங்களை உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் பெரிய பட்ஜெட் படங்களை கூட தங்களின் விமர்சனங்களால் காலி செய்து விடுகின்றனர். இதன் காரணமாக திரையரங்க வளாகத்தில் நின்று பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பது குறித்து சிலர் விமர்சனம் வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்தாலும் சிலர் விமர்சனம் இருப்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் சரிவை சந்திக்கிறது என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேசமயம் திரையரங்க வளாகத்தில் விமர்சனம் கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று (டிசம்பரில் 3) விசாரணைக்கு வந்த நிலையில் திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌந்தர் அவதூறு பரப்புவது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். விமர்சன கருத்து என்பது சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.