டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான மகேஷ்பாபு, ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் புகாரி, ஒக்கடு, அத்தடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வௌியாகி மாபெரும் ஹிட் அடித்தன. இதில் ஒக்கடு திரைப்படம் தான் தமிழில் கில்லி என்றபெயரில் ரீமேக் செய்தனர். இதில் விஜய் நடித்திருப்பார்.
மகேஷ்பாபு 2000-ம் ஆண்டில் நடித்த திரைப்படம் வம்சி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நர்மதா நடித்திருப்பார். இப்படத்தின்போதே இருவரும் காதலிக்கத் தொடங்கி 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தாரா என்ற மகளும், கௌதம் என்ற மகனும் உள்ளனர். அண்மைக்காலமாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். வெளிநாட்டில் தங்கி படிக்கும் அவர் அவ்வப்போது அவரது புகைப்படம் மற்றும் நடன வீடியோக்களை பகிர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதனிடையே, அவர் பிஎம்ஜே நகை நிறுவனத்தின் பிராண்ட் தூதராவும் உள்ளார்.
இந்நிலையில், சித்தாரா பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் போலிக்கணக்குகளை தொடங்கி பண மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்பி கம்பெனியும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.