விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இப்படம் கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், மாளவிகா மோகனன் லண்டன் சென்றுள்ளார். தங்கலானில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் டேனியலை அங்கு அவர் சந்தித்துள்ளார். இருவரும் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பல மாதங்களுக்குப் பிறகு அவரை லண்டனில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இருவரும் ‘தங்கலான்’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.