நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட, விஜயின் மாஸ்டர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் ரஜினி விஜய் மட்டுமல்லாமல் தனுஷ், விக்ரம், கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் பிரபாஸின் தி ராஜாசாப் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தினை மாருதி இயக்க பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸ் குறித்தும் தி ராஜாசாப் படம் குறித்தும் பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, ” தி ராஜாசாப் படத்தின் படப்பிடிப்பை ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. அந்தப் படம் நன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் பிரபாஸ் எனக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவர். தெலுங்கில் அறிமுகமாகியுள்ள முதல் படத்திலேயே அவருடன் நடிப்பது எனக்கு உற்சாகத்தை தந்துள்ளது. ரசிகர்களுடன் இந்த படத்தை திரையில் காண நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.