மம்மூட்டி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை என்று நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம். கடந்த ஆண்டில் நடிகர் மம்மூட்டி சிறந்த மற்றும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் அவர் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் மம்மூட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் தி கோர். இப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக அவர் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம்.
இப்படத்தில் 70 வயதிற்கு மேலான முதியவர் வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற ராகுல் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.
இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மலையாளம் மட்டுமன்றி தெலுங்கு, தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், படம் குறித்து பேசிய நடிகர் மம்மூட்டி, படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என யாருமே இல்லை. படத்தில் முழுக்க முழுக்க கதாபாத்திரங்கள் மட்டுமே பேசும் என தெரிவித்துள்ளார்.