டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய குட் நைட் படத்தில் நடித்திருந்தார். இதில் மணிகண்டன் உடன் இணைந்து மீதா ரகுநாத் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்ததாக மணிகண்டன், பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ள லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா, கண்ணன் ரவி, ஹரிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். காதலர்களுக்கும் இடையிலான சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் இப்படம் 2024 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என செய்திகள் பரவி வந்தது. அதன்படி இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.