குடும்பஸ்தன் படத்தின் திரைவிமர்சனம்.
ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்தது இவர், குடும்பஸ்தன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் இன்று (ஜனவரி 24) திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் தொடக்கத்தில் மணிகண்டன், கதாநாயகியான சான்வி மேக்னாவை காதல் திருமணம் செய்ய இரு வீட்டாரும் அதை எதிர்க்கின்றனர். இருப்பினும் மணிகண்டன் தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். மணிகண்டனின் அக்காவை ஒரு வசதியான குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அக்காவின் கணவர் எப்போதும் மணிகண்டனின் குடும்பத்தினரை மட்டம் தட்டியே பேசுவார். அதே சமயம் மணிகண்டனின் பெற்றோர்கள் அவருடைய வருமானத்தை நம்பி தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. சூழல் எப்படி இருக்க தனது குடும்பத்தை நடத்த கடனுக்கு மேல் கடன் வாங்குகிறார் மணிகண்டன். இதன் பிறகு அவருடைய வாழ்வில் என்ன நடந்தது என்பதை காமெடியாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர்.
வழக்கம்போல் நடிகர் மணிகண்டன் தனது எதார்த்தமான நடிப்பினால் கைதட்டல் பெறுகிறார். அந்தளவிற்கு மணிகண்டனின் கதாபாத்திரம் அனைவரையும் தொடர்புப்படுத்துகிறது. குடும்ப செலவுக்காக கடனில் சிக்கி தவிக்கும் இளைஞன் ஒருவன் தனது வாழ்வில் உள்ள பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் தோல்விகளையும் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் தந்துள்ளனர். அந்த வகையில் குடும்பஸ்தன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காமெடி கான்செப்டில் கொடுத்திருந்தது ரசிக்க வைக்கிறது. அதாவது பல படங்களில் பார்த்திருக்கும் காமெடிகள் தான் என்றாலும் நடிகர்களின் இயல்பான நடிப்பு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் மணிகண்டன் எப்படி தன்னுடைய நடிப்பினால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறாரோ அதேபோல் நடிகர் குரு சோமசுந்தரமும் தனது நடிப்பில் அசத்திவிட்டார். அடுத்தது பாலாஜி சக்திவேல், நிவேதிதா ராஜப்பன், பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். அடுத்தது சுஜித் என். சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிகர்களின் உடல் மொழியை ரசிகர்களுக்கு நேர்த்தியாக கடத்தி இருக்கிறது. வைஷாக்கின் இசையில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கேற்ப நகர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. எனவே குடும்பஸ்தன் திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக கண்டு களிக்கலாம்.