மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படமானது கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று சுமார் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. எனவே அடுத்தபடியாக இயக்குனர் சிதம்பரம் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி இயக்குனர் சிதம்பரம் தெலுங்கு மொழியில் அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இவருடைய புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி சிதம்பரம் அடுத்ததாக மலையாளத்திலேயே புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்று போஸ்டரின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை தளபதி 69 மற்றும் டாக்ஸிக் ஆகிய படங்களை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜித்து மாதவன் எழுத்தாளராக பணிபுரிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது இந்த போஸ்டரில் இப்படம் 2025 இல் திரைக்கு கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.