மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படத்தினை இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்தார். படத்தில் சௌபின் சாகிர், பாபு ஷாகிர், ஷான் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொடைக்கானலில் இருக்கும் குணா குகையை மையமாக வைத்துஉருவாக்கப்பட்டிருந்தது. அதாவது கிட்டத்தட்ட 900 அடி பள்ளத்தில் விழுந்த நண்பனை காப்பாற்றுவதற்காக மற்ற நண்பர்கள் அனைவரும் எப்படி போராடுகிறார்கள் என்பதை பரபரப்பான திரை கதையுடன் காட்டப்பட்டிருந்த படம்தான் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படம் கேரள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களையும் மெதுவாக கவர்ந்து கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அந்த வகையில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தினையும் படக்குழுவினரையும் பாராட்டினர். இவ்வாறு ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த விழாவில் தேர்வான முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.