மாரி செல்வராஜ் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி மீண்டும் வெற்றி இயக்குனராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவரது இயக்கத்தில் கடைசியாக வாழை எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் மாரி செல்வராஜின் உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதேசமயம் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ், கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன்படி மாரி செல்வராஜ் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படமானது மாரி செல்வராஜின் தந்தையை பற்றிய கதையாக இருக்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் கார்த்தி, சர்தார் 2, கைதி 2, கார்த்தி 29 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.