பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்குச் சென்ற இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் ஆகியோரின் கூட்டணியில் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ், வாழை எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன்படி பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனமும், அப்பிளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. இப்படம் ஏற்கனவே கடந்த மார்ச் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.