மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர அதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக தனுஷ், கார்த்தி, விக்ரம் போன்றோர் வரிசை கட்டி நிற்கின்றனர். அதேசமயம் இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னா இதற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம் தவிர அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே நிறைவடைந்து சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி இப்படத்தை வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.