மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்ட பொழுது படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. காரணம் படத்தின் நாயகன் விஷால் நடித்த முந்தைய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன. எனவே இருவருக்கும் ஒரு வலிமையான கம்பேக் தேவைப்பட்டது. அதனை சாதித்து காட்டியுள்ளதா மார்க் ஆண்டனி விமர்சனம் இதோ.விஞ்ஞானியாக வரும் செல்வராகவன் டைம் டிராவல் கான்செப்டில் இறந்த காலத்தில் இருப்பவர்களுடன் பேசக்கூடிய ஒரு தொலைபேசியை கண்டுபிடிக்கிறார். இந்த தொலைபேசி நிகழ்காலத்தில் இருக்கும் விஷால் கையில் கிடைக்கிறது. அதன் பின்னர் நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்திற்கும் இடையே அந்த தொலைபேசியால் நிகழ்ந்த சம்பவங்கள் தான் படத்தின் மீதி கதை. படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருக்கும் இரட்டை கதாபாத்திரங்கள். நிகழ்காலத்தில் இருவரும் மகன்களாகவும் கடந்த காலத்தில் தந்தைகளாகவும் வருகின்றனர்.
படத்தில் நிகழ்காலமாக 1995 ஆம் வருடமும் கடந்த காலமாக 1975 ஆம் வருடமும் காட்டப்பட்டுள்ளது. இரு வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற உடை நடிகர்களின் தோற்றம் மற்றும் கலை என அனைத்திலும் சிறப்பான பணியை படக்குழுவினர் செய்துள்ளனர். படத்தின் முதல் பாதி முழுக்கவே ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வைக்கும் வண்ணமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இடைவேளை நெருங்க நெருங்க படம் சூடு பிடிக்கிறது. ஒரு அசத்தலான இடைவேளை காட்சிக்கு பிறகு படம் மீண்டும் பரபரப்பாக நகர்கிறது. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி கலகலப்பாகவும் ரசிக்கும் படியும் அமைந்துள்ளது. படத்தில் நடிகர்களின் தேர்வு மிகவும் பொருத்தமாக இருந்தது. குறிப்பாக எஸ் ஜே சூர்யா வில்லத்தனத்திலும் காமெடியிலும் வழக்கம்போல அவருடைய ஸ்டைலில் மிரட்டி இருக்கிறார்.
விஷாலுக்கும் மாஸ் காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளன. படத்தின் படத்தொகுப்பு ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அனைத்துமே மிகச் சரியாக கையாளப்பட்டுள்ளன. படத்தில் சில்க் ஸ்மிதா தோன்றும் காட்சிகள் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. ஒரு சில பழைய பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளனர். அதையும் படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் நேர்த்தியாக கையாண்டு ரசிக்கும்படி அமைத்துக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்கள் போல இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு தரமான படமாக அமைந்துள்ளது மார்க் ஆண்டனி. ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூலை ஈட்டும் எனவும் நம்பப்படுகிறது.