மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து வா வாத்தியார், சர்தார் 2 போன்ற பல பட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க 96 பட இயக்குனர் பிரேம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.