திரைத்துறையினரையும், தமிழ் மக்களையும், கட்சித் தொண்டர்களையும் தீராத சோகத்தில் ஆழ்த்தியது கேப்டன் விஜயகாந்தின் மரணம். கடந்த டிசம்பர் 28 அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார் விஜயகாந்த். அவருடைய உடல் கோயம்பேடு பகுதியில் உள்ள அவருடைய தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல ரசிகர்கள் மொட்டை அடித்தும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திரைத் துறையில் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்புக்காக நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்து வருகிறது. அவருடைய பெயரை சூட்டுவது சரியான முடிவுதான் என்று பல பிரபலங்களும் ஆதரவளித்தனர்.
இந்நிலையில் நலிவுற்ற கலைஞர்கள் சார்பாக விஜயகாந்துக்கு நினைவஞ்சலி கூட்டம் மதுரை-திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சின்னத்திரை பிரபலமான மதுரை முத்து தலைமை ஏற்றிருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், “விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர். அவருடைய இறப்பை தன் வீட்டில் உள்ள ஒருவரின் இறப்பாகவே ஒவ்வொரு தமிழ் மக்களும் பார்க்கின்றனர். நேர்மை மிக்க விஜயகாந்த் மதுரை மண்ணில் பிறந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவருடைய நினைவைப் போற்றும் வகையில் “கேப்டன் விருதுகள்” மதுரையில் வழங்கியுள்ளோம். மதுரை மண்ணின் மைந்தனாகிய விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைப்பது பொருத்தமாக இருக்கும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் கேப்டன் விஜயகாந்த் பற்றி தன்னுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
- Advertisement -