புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2015-ம் ஆண்டை காட்டிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மழை நின்று மூன்று நாட்கள் ஆன போதிலும், சென்னை நகரம் இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால், மக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது. அதுமட்டுமன்றி, பல இடங்களில் இதுவரை தொலைதொடர்பு சேவைகள் முறையாகவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவானது.
கனமழை காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மழை நின்ற போதிலும், கட்டடங்களை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். சிலர் அரசுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்,.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி’ எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது வீட்டுக்குத் தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம் விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன் என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன் பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம் என குறிப்பிட்டுள்ளார். ஹரிஸ் கல்யாண், சூர்யா, கார்த்தி ஆகியோரும் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கி இருந்தனர்.